இந்திய ரயில்வே ஜூலை 1 முதல் பயணிகளின் நலனுக்காக 10 புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதில், ‘காத்திருப்பு பட்டியலில் உள்ளோருக்கு தொல்லை இன்றி ரயில்வேயால் இயக்கப்படும் சுவிதா ரயில்களில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வழங்குவது, தத்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீதத் தொகை திருப்பி அளிப்பது, இலக்கு எச்சரிக்கை, Wakeup Call-destination Alert வசதி போன்ற பல அம்சங்களை இந்திய ரயில்வே ஜூலை 1 முதல் அறிமுகப்படுத்த போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் இதே செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு விதிகளும் அமலுக்கு வராது என்றும், இந்த செய்தி ஆதாரமற்றது என்றும் இந்திய ரயில்வே பலமுறை தெளிவுப்படுத்தியுள்ளது.
2017 ஆம் ஆண்டில், ரயில்வே அமைச்சகம், வைரலான இந்த செய்தி குறித்து விரிவான விளக்கத்தை வெளியிட்டது. அதில், “இந்தச் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. இந்திய ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து சரிபார்க்கப்படாமல் இந்த செய்தியை சமூக ஊடகத்தில் சிலர் வெளியிட்டுள்ளனர். இது ரயில் பயனாளிகள் மனதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொது இந்த போலியான செய்தி மீண்டும் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் என வேகமாக பரவி வருகிறது. எனவே, இதை யாரும் உண்மை என்று நம்பி பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.