- ExplainersHealth CheckViral Check
- January 30, 2023
- No Comment
அரளிக்காய் சாப்பிட்டால் அனைத்து விதமான நோய்களும் குணமாகுமா?
வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் என சமூக ஊடகங்களில் வேகமாக பரவிவரும் இந்த பதிவில் உண்மை இருக்கிறதா என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
அரளி காய் போன்ற ஒன்றைப் பயன்படுத்தி ஒரு புகைப்படம் உருவாக்கப்பட்டு, “இந்த மூலிகையை நெய்யில் விழுதாக அரைத்து பசும்பாலில் கலந்து பருகினால் அனைத்து விதமான நோய்களும் குணமாகும் என்று kg memes என்ற Facebook பக்கம் முதன்முதலில் ஜனவரி 4, 2020 அன்று ஒரு பதிவை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, பலர் இதைப் பகிர்ந்து வந்தனர். அதோடு தற்போது அந்த பதிவு மீண்டும் பலரால் பரவப்பட்டு வருகிறது. Fact crescendo என்ற உண்மை கண்டறியும் தளம், அதன் நம்பகத்தன்மையை சோதித்தது.
அதில், படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூலிகை விஷம் நிறைந்த காயாகும். ஆனால் இதை அவர்கள் சாப்பிடப் பரிந்துரைக்கிறார்கள். இதை ஒரு நையாண்டியாக கருத முடியாது. இதை யாராவது உண்மை என்று நம்பி சாப்பிட்டால் அவர்கள் இறந்துவிடுவார்கள், என குறிப்பிட்டுள்ளது.
மேலும், மூலிகை ஆராய்ச்சியாளர் எம். மரியா பெல்ஜினைப் பேட்டி கண்டதில், அவர் கூறியதாவது,
“விஷமுள்ள அரளிச் செடிக்கும், காய்க்கும் மருத்துவ குணம் உள்ளது என்பதை மறுக்கமுடியாது. ஆனால், அது உட்கொள்ளும் மருந்தாக மருத்துவர்கள் கொடுக்கப்படுவது இல்லை. இதை தகுதி வாய்ந்த மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே மருந்தாக பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் அது ஆபத்தாகிவிடும்.
குறிப்பாக, குழந்தைகள் ஒரு அரளி இலையை சாப்பிட்டாலும் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இதுபோன்ற விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அரளி விதை, அரளி பழத்தை அரைத்து பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர் மேலும் சில குழந்தைகள் இதை அறியாமல் சாப்பிட்டு உயிர் இழந்துள்ளனர்.
இந்நிலையில், இப்படி முகநூல் பக்கத்தில், எண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலில் சேர்த்து சாப்பிடுங்கள் எனச் சொல்வது, நையாண்டியாகக் கருத முடியாது.
எனவே, இதுபோன்ற தகவல்களை பொதுவெளியில் பகிர்வதும், சமூக ஊடகங்களில் அதை ஷேர் செய்வதையும் தவிர்க்கவேண்டும், என்றார்.
தகுந்த ஆதாரங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில், மேலே குறிப்பிட்டுள்ள பதிவு பொய்யானது என நிரூபிக்கப்பட்டு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிலர் இதுபோன்ற பதிவுகளை வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் மருத்துவப் பயன்கள் இருப்பதாகக் கூறி இதுபோன்ற பல பதிவுகள் பரவி வருகின்றன.
எனவே, எந்தவொரு நிபுணர் ஆலோசனை இல்லாமல் உடல்நலம் தொடர்பான பதிவுகளை நம்ப வேண்டாம் என்றும், அதை சரிபார்க்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் எங்கள் வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
Courtesy: FactCrescendo