- Viral Check
- May 23, 2023
- No Comment
நெற்றியில் கணவர் பெயரை பச்சை குத்திய பெண் – பரவும் வீடியோ உண்மையா?
பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவர் பெயரை நெற்றியில் பச்சை குத்திக்கொள்வது போல் ஒரு வீடியோ வைரலானது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என பல தளங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டது. அதன் கீழ் அந்த பெண்ணின் காதலை பாராட்டியும், அவர் செய்வது முட்டாள்தனம் என்றும் கமெண்ட்கள் குவிந்தன.
இந்த வீடியோவை வைத்து பல பிரபல ஊடகங்கள் இதை செய்தியாகவும் வெளியிட்டது. அதனால், இந்த வீடியோவும், அதில் உள்ள பெண்ணும் கணவரின் பெயரை பச்சைக் குத்திக்கொள்வது நிஜமா என விசாரித்தோம்.
அதில், இந்தத் தகவல் பொய்யானது எனத் தெரியவந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரலான இந்த வீடியோவில் உள்ள ரக்ஷா என்ற பெண்ணிடம் BOOM fact check குழு உரையாடியபோது,
“அந்த வீடியோ உண்மை அல்ல, தவறாக சித்தரிக்கப்பட்டது என்றும் தன் நெற்றியில் கணவர் பெயரை பதிக்கவில்லை,” என்றும் கூறியுள்ளார்.
ஆனால், இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராயாமல் Times Now, NDTV, Hindustan Times மற்றும் News 18 ஆகிய செய்தி ஊடகங்கள், இதை உண்மை காதல் என்றும், அளவுகடந்த காதல் என்றும் தலைப்பிட்டு செய்தியாக வெளியிட்டுள்ளனர்.
“இது உண்மையான டாட்டூ அல்ல. நாங்கள் அதைச் செய்யவில்லை. இது வெறும் இம்ப்ரெஷன்… எங்கள் பக்கத்தில் ரீல்ஸ் போடுவதற்காக அப்படி ஒரு வீடியோவை எடுத்து போட்டோம்,” என்று ரக்ஷா கூறியுள்ளார்.
மேலும், நாங்கள் அந்த வீடியோவை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்தபோது, மார்ச் 18, 2023 அன்று king_maker_tattoo_studio இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே பக்கத்தில் ஒரு சில தினங்களுக்குப்பின் அதே பெண் நெற்றியில் எந்த ஒரு டாட்டூவும் இன்றி இருப்பதைக் காணலாம்.
https://www.instagram.com/p/CsjXyOsr-cE/
சமூக வலைதளங்களில் பரவும் இத்தைகைய வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே நம்பி பல பிரபல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது. சமூக ஊடங்களில் வரும் வீடியோக்கள் எல்லாம் நிஜம் என நம்பி போலிச் செய்திகளை பகிர்வது தவறான விளைவுகளை சிலசமயம் உண்டாக்கிவிடும், எனவே, இந்த விடியோவை உண்மை என்று நம்பி யாரும் இனி பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.