வன்முறைகளுக்கு வித்திட்ட பொய்ச் செய்திகள்
இப்படி தவறான தகவல்கள், பிரச்சாரங்கள் ஒவ்வொன்றும் மதிப்பீடு செய்யபட்டு போலியானவை என்று கண்டறியப்பட்டாலும் அவை ஏற்படுத்திய சேதங்களைச் சொல்லால் விவரிக்க முடியாது. பல குக்கி-ஸோ பெண்கள் இத்தகைய தவறான தகவல் பிரச்சாரங்களின் சுமைகளைச் சுமந்தனர். இதனால் இவர்கள் வன்முறை மற்றும் பல்வேறு வகையான பாலியல் வன்கொடுமைகளுக்கு பலியாகினர்.
இந்த ‘பழிவாங்கும்’ வன்முறையால் இருதரப்பிலும் பாதிக்கபட்டவர்கள் பெண்களே. பழி தீர்க்க பாலியல் வன்புணர்வு என்ற கொடுமையை வேறு இனப் பெண்களுக்கு செய்வது எதிரியை சிறப்பாக பழிவாங்கும் ஆயுதமாக கருதப்படுகிறது.
உளவியல் ரீதியாக ஒரு சமூகத்தை தாழ்த்த நினைத்தால் அந்த இனத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தினாலோ அல்லது வன்புணர்வு செய்து துன்புறுத்தினாலோ, அந்த இனத்தின் ஆண்களை வெற்றி கொண்டதாகக் கருதப்படுகிறது.
வைரல் ஆக்கப்பட்ட இந்த போலிச் செய்திகள் உண்மை அல்ல என்று தெரிந்த பின்னும் மணிப்பூரில் பல மாதங்களாக வன்முறை நிகழ்வதன் காரணம் என்ன?
உண்மையிலேயே அந்த செய்திகள் போலி என நிராகரிக்கப்பட்ட பின்னும் மக்கள் அதை நம்புகிறார்களா? அல்லது ஒரு காரணத்தை உருவாக்கி, குற்றவாளிகள் தங்கள் அட்டூழியங்களை நியாயப்படுத்த இந்த திட்டமிட்ட தவறான தகவல் பிரச்சாரத்தினை பரப்புகிறார்களா?
இதே போல், 1993 ஆம் ஆண்டு மணிப்பூரில் முஸ்லிம்களிக்கு எதிராக நடந்த வன்முறையிலும் போலியாக பரவிய செய்தியால் 130 பன்கள் இன முஸ்லிம்கள் உயிரிழந்ததாக செய்தி வெளியாகிஉள்ளது.
link: https://twocircles.net/2023may26/449043.html
தவறான தகவல் மூலம் சாதகமான பிரச்சாரத்தை ஏற்படுத்தி சமூக பிளவுகளை உருவாக்க முடியும் என்பதற்கு மணிபூரில் நடக்கும் கொடுமைகள் நமக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றன.
இந்த போலிச்செய்திகள் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டும் தீங்கிழைக்கவில்லை. அங்கே நடக்கும் கொடுமைகள் மனித இனமே வெட்கபடும் அளவுக்கு கொடூரமாகி உள்ளது.
போலியான செய்திகள் ஏற்படுத்தும் தீங்கினை உணர்ந்து மக்கள் அனைவரும் வெறுப்பை ஒருவர் மீது ஒருவர் செலுத்தாமல், பழிவாங்கும் குணத்தை விட்டால் தான் மணிப்பூரில் அமைதி நிலவும்.