- Politi CheckViral Check
- June 9, 2023
- No Comment
Fact Check: ரயில் ட்ராக்கில் கற்களை வைத்து விபத்து ஏற்படுத்த சதி என பரவும் வீடியோ உண்மையா?
இந்தியாவையே உலுக்கிய மிகப்பெரிய ரயில் விபத்து ஒடிசாவில் கடந்த 2ம் தேதி நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் நீண்ட தூரத்திற்குக் கற்களை அடுக்கி வைத்திருந்த சிறுவனின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.
Claim: WhatsApp, facebook மற்றும் பல சமூக தளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில், சிறுவன் ஒருவன் ரயில் தண்டவாளத்தில் கற்களை அடிக்கியதை தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் அந்த சிறுவனை பிடித்து விசாரித்து வருவது போல் காட்சிகள் உள்ளது. அதோடு, தண்டவாளத்தின் மீது வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றச் சொல்லி அந்த சிறுவனை அழைத்துச் செல்கின்றனர் அந்த ஊழியர்கள்.
மேலும், அச்சிறுவனை காவல்துறையிடம் அழைத்துச் செல்வதாக அப்பணியாளர்கள் கூறுகையில், வேண்டாம் எனக் காலில் விழுந்து அழுகிறான் அவன்.
இந்த வீடியோ பதிவுடன் செய்தி ஒன்றும் இணைக்கப்பட்டு பரவி வருகிறது. அதில், கர்நாடகாவில் ரயிலை தடம் புரளச் செய்ய சிறுவர்களுக்கு சில அமைப்பினர் பயிற்சி அளித்துள்ளனர். அதுவே இந்த வீடியோவில் உள்ளது என்று பலவிதங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலுடனான வீடியோ ட்விட்டரில் பலரால் குறிப்பாக பா.ஜ.க-வைச் சேர்ந்த பிரமுகர்களால் பரப்பப்பட்டு வருகின்றது.
உண்மை என்ன?
இந்த காணொளியை இணையத்தில் தேடியதில், அது சமீபத்தில் எடுத்த வீடியோ இல்லை என்பது தெரியவந்தது. மேலும், சிறுவன் கன்னடத்தில் உரையாடுவதால், இது கர்நாடக மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று தெளிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, Alt news fact check குழு ரயில்வே ஆய்வாளர்களிடம் தொலைப்பேசியில் உரையாடியதில், ”இந்நிகழ்வு 2018ல் கல்புர்கி மற்றும் வாடி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையில் நடைப்பெற்றது,” என்று தெரிவித்துள்ளார்.
”அச்சிறுவன் விளையாட்டாகக் கற்களைத் தண்டவாளத்தில் வைத்துள்ளான். அவனது தவறை உணர்ந்து அவன் மன்னிப்பு கேட்டதினால், வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் ரயில்வே அதிகாரிகள் அவனை மன்னித்து அனுப்பி வைத்தனர். அச்சிறுவன் எந்த உள்நோக்கத்துடனும் அதனைச் செய்யவில்லை. மேலும் அவனுக்குப் பின்னால் எந்த ஒரு தனி நபரோ அல்லது குழுவோ இல்லை,” என்று உறுதி செய்திருக்கிறார்.
மதிப்பீடு: இதிலிருந்து ரயிலைத் தடம்புரள வைக்கச் சிறுவர்கள் செய்த முயற்சி என்று சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளி, 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது மற்றும் சிறுவர்கள் இதை எந்த விதமான தவறான நோக்கத்திலோ, அமைப்பின் பேரிலோ அவர்கள் செய்யவில்லை என்பது தெரிகிறது. எனவே, இந்த தவறான வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.